அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
திருவிடைக்கழி
792. அனலப்பரி
ராகம் -
தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் - தனதான
பாடல்
அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக் - குடில்பேணா

அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற் - றறியாதே

குனகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக் - கொடியார்தங்

கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக் - கடவேனோ

தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற் - புயவீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற் - பகர்வோனே

கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக் - கதிர்வேலா

கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

793. இரக்குமவர்க்கு
ராகம் -
தாளம் -
தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத் தனத்தனதத்
தனத்தனதத் தனத்தனதத் - தனதான
பாடல்
இரக்குமவர்க் கிரக்கமிகுத் தளிப்பனசொப் பனத்திலுமற்
றெனக்கியலுக் கிசைக்கெதிரெப் - புலவோரென்

றெடுத்துமுடித் தடக்கைமுடித் திரட்டையுடுத் திலச்சினையிட்
டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற் - றியல்மாதர்

குரக்குமுகத் தினைக்குழலைப் பனிப்பிறையொப் பெனப்புயலொப்
பெனக்குறுகிக் கலைக்குள்மறைத் - திடுமானின்

குளப்படியிற் சளப்படுமிப் பவக்கடலைக் கடக்கஇனிக்
குறித்திருபொற் கழற்புணையைத் - தருவாயே

அரக்கரடற் கடக்கஅமர்க் களத்தடையப் புடைத்துலகுக்
கலக்கணற் குலக்கிரிபொட் - டெழவாரி

அனைத்தும்வறப் புறச்சுரர்கற் பகப்புரியிற் புகக்கமலத்
தனைச்சிறையிட் டிடைக்கழியிற் - பயில்வோனே

கரக்கரடக் களிற்றுமருப் புலக்கையினிற் கொழித்தமணிக்
கழைத்தரளத் தினைத்தினையிற் - குறுவாளைக்

கணிக்குறவக் குறிச்சியினிற் சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
கயத்தொடுகைப் பிடித்தமணப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

794. பகரு முத்தமிழ்
ராகம் - ஸெளராஷ்டிரம்
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட - 1 1/2, தகதிமி - 2
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் - தனதான
பாடல்
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் - பலவாழ்வும்

பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் - தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் - பெருவாழ்வும்

புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் - தரவேணும்

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் - பயில்வோனே

தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் - திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் - குமரேசா

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

795. படிபுனல்
ராகம் - ரேவதி
தாளம் - அங்கதாளம் (5)
தக - 1, தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தக - 1
தனனதன தத்தனத் தனனதன தத்தனத்
தனனதன தத்தனத் - தனதான
பாடல்
படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
பவமுறைய வத்தைமுக் - குணநீடு

பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக் - குடில்பேணும்

உடலதுபொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற் - றடிநாயேன்

உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத் - தருள்வாயே

கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக் - கதிர்வேலா

குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப் - புலவோனே

தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத் - துறையோனே

தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

796. பழியுறு
ராகம் - கல்யாணி
தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனனத் தனதான தனதனனத் தனதான
தனதனனத் தனதான - தனதான
பாடல்
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர் - தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமைபிதற் றிடுலோக - முழுமூடர்

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது - விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத - அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர் - விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை - விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பலவேல
அடல்தருகெற் சிதநீல - மயில்வீரா

அருணைதீருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

797. பெருக்கமாகிய
ராகம் -
தாளம் -
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன
தனத்த தானன தனதன தனதன - தனதான
பாடல்
பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
பிடித்து போயவர் தொடையொடு தொடைபட - வுறவாடிப்

பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் - கனமாலாய்

முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் - பொருள்தீரின்

முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ - அருள்தாராய்

நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற்
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி - கொளும்வேலா

நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
புரத்தி லேநகை புரிபர னடியவர்
நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய - புதல்வோனே

செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
திருக்கை வேல்வடி வழகிய குருபர - முருகோனே

சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

798. மருக்குலாவிய
ராகம் - காபி
தாளம் - சதுஸ்ர ரூபகம் - திஸ்ர நடை (9) (எடுப்பு - அதீதம் வீச்சில் 1 தள்ளி)
தனத்த தானன தனதன - தனதான
பாடல்
மருக்கு லாவிய மலரணை - கொதியாதே

வளர்த்த தாய்தமர் வசையது - மொழியாதே

கருக்கு லாவிய அயலவர் - பழியாதே

கடப்ப மாலையை யினிவர - விடவேணும்

தருக்கு லாவிய கொடியிடை - மணவாளா

சமர்த்த னேமணி மரகத - மயில்வீரா

திருக்கு ராவடி நிழல்தனி - லுறைவோனே

திருக்கை வேல்வடி வழகிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

799. முலைகுலுக்கிகள்
ராகம் -
தாளம் -
தனன தத்தன தனதன தனன தத்தன தனதன
தனன தத்தன தனதன - தனதான
பாடல்
முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள் - மதவேணூல்

மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள் - இடையேசூழ்

கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள் றித்தம
கனியி தழ்ச்சுருள் - பிளவிலை - யொருபாதி

கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள் - புரிவாயே

அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
அணிக ழுப்பெற நடவிய - மயில்வீரா

அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல் - பெரியோனே

சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு - மருகோனே

திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிகள்வளர்
திருவி டைக்கழி மருவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 8

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com