அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
திருவானைக்கா
353. அஞ்சன வேல்விழி
ராகம் -
தாளம் -
தந்தன தானன தத்தத்தத்
தந்தன தானன தத்தத்தத்
தந்தன தானன தத்தத்தத் - தனதான
பாடல்
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் - நகரேகை

அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பமரம் வீணில விழ்த்துடுக்கவு - மிளைஞோர்கள்

நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு - மெவரேனும்

நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது - மொருநாளே

குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம - கணராஜன்

கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை - யிளையோனே

துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்த சடானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய - பரிபாலா

துங்க கஜாரணி யத்திலுத்தம
சம்பு தடாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

354. அம்புலி நீரை
ராகம் -
தாளம் -
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன - தனதான
பாடல்
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண - ரருள்பாலா

அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு - மணியாமல்

வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி - லிருகாதில்

மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ - னழிவேனோ

கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி - யபிராமி

கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை - யருள்பாலா

செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண - மருள்வோனே

செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

355. அனித்தமான
ராகம் - பூபாளம்
தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை) (6) (எடுப்பு - அதீதம்)
தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான - தனதான
பாடல்
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
யடைத்து வாயு வோடாத - வகைசாதித்

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் - மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ - னுடல்வேறு

செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி - யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத - மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர - வயலூரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய - மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
மதித்த சாமி யேதேவர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

356. ஆரமணி
ராகம் -
தாளம் -
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் - தனதான
பாடல்
ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் - துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் - தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் - கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் - புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் - பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் - சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் - புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

357. ஆலம்வைத்த விழி
ராகம் -
தாளம் -
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன - தனதான
பாடல்
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் - தெருவூடே

ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ - ருடன்மாலாய்

மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி - யதனாலே

மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி - னருள்தாராய்

பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை - மடியாத

பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு - குடனாட

ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை - யருள்வோனே

ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

358. உரைக்காரிகை
ராகம் -
தாளம் -
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான - தனதான
பாடல்
உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை - யொன்றுபாட

உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் - கண்டிலேன்யான்

குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு - கொண்டுவாபொன்

குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் - மங்குவேனோ

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ - ரைந்தஏடிட்

டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ - மர்ந்தவேளே

திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி - லந்திநூல்செய்

திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

359. ஓல மறை
ராகம் - ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தகதகிட - 2 1/2, தகதிமி - 2
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன - தனதான
பாடல்
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ - ரெவராலும்

ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது - சிவஞானம்

சால வுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ - னவியோமஞ்

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் - பெறுவேனோ

வால குமர குககந்த குன்றெளி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் - களைவோனே

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ - வயலூரா

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை - த்ரிபுராயி

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

மேலே செல்க

360. கருமுகில் திரளாக
ராகம் -
தாளம் -
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன - தனதான
பாடல்
கருமுகில்திர ளாகக் கூடிய
இருளெனமரு ளேறித் தேறிய
கடிகமழள காயக் காரிகள் - புவிமீதே

கனவியவிலை யோலைக் காதிகள்
முழுமதிவத னேரப் பாவைகள்
களவியமுழு மோசக் காரிகள் - மயலாலே

பரநெறியுண ராவக் காமுகர்
உயிர்பலிகொளு மோகக் காரிகள்
பகழியைவிழி யாகத் தேடிகள் - முகமாயப்

பகடிகள்பொரு ளாசைப் பாடிக
ளுருவியதன பாரக் கோடுகள்
படவுளமழி வேனுக் கோரருள் - புரிவாயே

மரகதவித நேர்முத் தார்நகை
குறமகளதி பாரப் பூண்முலை
மருவியமண வாளக் கோலமு - முடையோனே

வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
முறையிடநடு வாகப் போயிரு
வரைதொளைபட வேல்விட் டேவிய - அதிதீரா

அரவணைதனி லேறிச் சீருடன்
விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் - அரிதாய

அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
உடையதொர்மயில் வாசிச் சேவக
அழகியதிரு வானைக்ட காவுறை - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 8

361. காவிப்பூவை
ராகம் -
தாளம் -
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன - தனதான
பாடல்
காவிப் பூவை யேவை யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன - இருதோடார்

காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை - சிதையாத

பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை - யினிமேலன்

பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள - நினையாதோ

கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் - விளையாடக்

கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த - வடிவேலா

ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி - லுறைவோனே

ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 9

362. குருதி புலால்
ராகம் - ரஞ்சனி
தாளம் - அங்கதாளம் (8)
தகதிமி - 2, தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகதிமி - 2
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன - தனதான
பாடல்
குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன - பொதிகாயக்

குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய - அதனாலே

சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடுந்தி யான மொன்றையு - முயலாதே

சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட - அருள்வாயே

ஒருதனி வேல்கொண்டு நீள்கர வுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய - கரவீரா

உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
உளமதில் நாளுங்க லாவி யின்புற - வுறைவோனே

கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
அரிகரி கோவிந்த கேச வென்றிரு
கழல்தொழு சீரங்க ராச னண்புறு - மருகோனே

கமலனு மாகண்ட லாதி யண்டரு
மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 10

363. நாடித் தேடி
ராகம் - சுத்த சாவேரி
தாளம் - அங்கதாளம் (6)
தகிட - 1 1/2, தகிட - 1 1/2, தகதிமிதக - 3
தானத் தானத் - தனதான
பாடல்
நாடித் தேடித் - தொழுவார்பால்
நானத் தாகத் - திரிவேனோ

மாடக் கூடற் - பதிஞான
வாழ்வைச் சேரத் - தருவாயே

பாடற் காதற் - புரிவோனே
பாலைத் தேனொத் - தருள்வோனே

ஆடற் றோகைக் - கினியோனே
ஆனைக் காவிற் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 11

364. நிறைந்த துப்பிதழ்
ராகம் -
தாளம் -
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன - தந்ததான
பாடல்
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறந்த ரித்தக ணாலால நேரென
நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென - நெஞ்சின்மேலே

நெருங்கு பொற்றன மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாச நேரென
நிதம்ப முக்கணர் பூணார நேரென - நைந்துசீவன்

குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
குமண்டை யிட்டுடை சோராவி டாயில - மைந்துநாபி

குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
குரங்கை யொத்துழல் வேனோம னோலய - மென்றுசேர்வேன்

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
மானங்க ளித்திட லாமோது ரோகித - முன்புவாலி

வதஞ்செய் விக்ரம சீராம னானில
மறிந்த திச்சர மோகோ கெடாதினி
வரும்ப டிக்குரை யாய்பார் பலாகவ - மென்றுபேசி

அறந்த ழைத்துநு மானோடு மாகடல்
வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் - மைந்தனான

அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலா யுதாவிய
னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் - தம்பிரானே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 12

365. பரிமள மிகவுள
ராகம் - தேஷ்
தாளம் - அங்கதாளம் (7 1/2) (எடுப்பு - 1/2 இடம்)
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன - தனதான
பாடல்
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்த வானூறு - முகில்போலே

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை - நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை - மலமாறா

வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது - மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக - ருறைபேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி - யருள்பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் - மருகோனே

முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 13

366. வேலைப் போல்விழி
ராகம் -
தாளம் -
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன - தனதான
பாடல்
வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் - முலையானை

மேலிட் டோபொர விட்டபொ றிச்சிகள்
மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் - களிகூருஞ்

சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
தோலைப் பூசிமிடி னுக்கியு ருக்கிகள் - எவரேனும்

தோயப் பாயல ழைக்கும வத்திகள்
மோகப் போகமு யக்கிம யக்கிகள்
சூறைக் காரிகள் துக்கவ லைப்பட - லொழிவேனோ

காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு - முநிவோர்கள்

கானத் தாசிர மத்தினி லுத்தம
வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் - மருகோனே

ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
பாயச் சாலித ழைத்திர தித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி - யுறைவேலா

ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிடு
ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 14

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com