அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
வைத்தீஸ்வரன் கோயில்
779. உரத்துறை போத
ராகம் - வாசஸ்பதி
தாளம் - சதுஸ்ர ஜம்பை (7)
தனத்தன தானத் - தனதான
பாடல்
உரத்துறை போதத் - தனியான

உனைச்சிறி தோதத் - தெரியாது

மரத்துறை போலுற் - றடியேனும்

மலத்திருள் மூடிக் - கெடலாமோ

பரத்துறை சீலத் - தவர்வாழ்வே

பணித்தடி வாழ்வுற் - றருள்வோனே

வரத்துறை நீதர்க் - கொருசேயே

வயித்திய நாதப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

780. எத்தனை கோடி
ராகம் - திலங்
தாளம் - திஸ்ர ரூபகம் (5) 0/3
தகதிமி - 2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2
தத்தன தான தான தத்தன தான தான
தத்தன தான தான - தனதான
பாடல்
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன - தளவேதோ

இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது - இனிமேலோ

சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு - மடியேனைச்

சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத - மருள்வாயே

நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு - முகவோனே

நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி - யருள்பாலா

பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல - மயில்வீரா

பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

781. பாட கச்சிலம்
ராகம் -
தாளம் -
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன - தனதான
பாடல்
பாட கச்சிலம் போடு செச்சைமணி
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி - னிடைநூலார்

பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் - மொழிமாதர்

ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி புட்குலம் போல பற்பலசொ - லிசைபாடி

ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் - செயலாமோ

சேட னக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி - ரறுதோள்மேல்

சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி - புகழ்வேலா

நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி - புனைவோனே

ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

782. மாலினாலெடுத்த
ராகம் - மனோலயம் (மத்யம ஸ்ருதி)
தாளம் - ஆதி 2 களை (திஸ்ர நடை) 24
தான தான தத்த தந்த தான தான தத்த தந்த
தான தான தத்த தந்த - தனதான
பாடல்
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்தசி ந்தை - யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து - இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் - கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து - அருள்வாயே

காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை - முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை - யருள்பாலா

சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி - லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

783. மூலாதாரமொடு
ராகம் -
தாளம் -
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன
தானா தானன தாத்த தந்தன - தனதானh
பாடல்
மூலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி - முனையூடே

மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர
மூடே பாலொளி ஆத்து மந்தனை - விலகாமல்

மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர - தவிசூடே

மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர
வாகார் தேனமு தூட்டி யென்றனை - யுடனாள்வாய்

சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ - னெமையாளுந்

தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ - ளருள்பாலா

வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் சூரரை வாட்டி யந்தகன்
வீடு டேவிய காத்தி ரம்பரி - மயில்வாழ்வே

வேதா நால்தலை சீக்கொ ளும்படி
கோலா காலம தாட்டு மந்திர
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

784. மேக வார்குழல்
ராகம் -
தாளம் -
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன
தான தானதன தானதன தானதன - தனதான
பாடல்
மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதிபரி - மளமேற

மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் - முழவோசை

ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ - டதிபார

ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட - லுழல்வேனோ

நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் - முநிவோர்கள்

நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட - விடும்வேலா

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை - புணர்வோனே

தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com