திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா |
ஒன்பதாம் திருமுறை |
1. கோயில் - பாதாதி கேசம் |
பண் - பஞ்சமம் |
215
மையல் மாதொரு கூறன் மால்
விடையேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக்
கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை
உள்ளிடம் கொண்டனவே. |
1 |
216
சலம்பொற் றாமரை தாழ்ந்தெழுந்த
தடமும் தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணியார்
தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்(து)
ஏத்த ஆடுபொற் கூத்தனார் கழல்
சிலம்பு கிண்கிணி என் சிந்தை
உள்ளிடங் கொண்டனவே. |
2 |
217
குருண்ட வார்குழல் கோதை மார்குயில்
போன்மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை தன்னுள்
திருமல்லு சிற்றம் பலவன்
மருண்டு மாமலை யான்மகள் தொழ
ஆடுங் கூத்தன் மணிபுரை தரு
திரண்ட வான்குறங்கென் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே. |
3 |
218
போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன்
மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ்
தடமில்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்ப்புலித் தோல்மிசை தொடுத்து
வீக்கும் பொன்நூல் தன்னினொடு
தாழ்ந்த கச்ச தன்றே
தமியேனைத் தளிர்வித்ததே. |
4 |
219
பந்த பாசமெலாம்அறப் பசுபாசம்
நீக்கிய பன்முனிவரோ(டு)
அந்தணர் வழங்கும் அணியார்
தில்லை அம்பலவன்
செந்தழல் புரைமேனியும் திகழும்
திருவயிறும் வயிற்றினுள்
உந்திவான்கழி என்உள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே. |
5 |
220
குதிரை மாவொடு தேர்பல குவிந்(து)
ஈண்டு தில்லையுள் கொம்ப னாரொடு
மதுரமாய் மொழியார் மகிழ்ந்
தேத்து சிற்றம் பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழ
காநடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்(து)
உள்ளிடங் கொண்டனவே. |
6 |
221
படங்கொள் பாம்பனை யானொடு
பிரமன் பரம்பரா! அருளென்று
தடங்கையால் தொழவும்
தழலாடுசிற் றம்பலவன்
தடங்கை நான்கும்அத் தோள்களும்
தடமார்பினில் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்ட மன்றே
வினையேனை மெலிவித்தவே. |
7 |
222
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்
தாடு சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும்
திருக்காதும் காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
அடியேனை ஆட்கொண் டனவே. |
8 |
223
செற்றவன் பரந்தீ எழச்சிலை கோலி
ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறிநீர்த்
தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு
மலரும் திருமுக மும்முகத்தினும்
நெற்றி நாட்டம் அன்றே
நெஞ்சு ளேதிளைக் கின்றனவே. |
9 |
224
தொறுக்கள் வான்கமல மலர்உழக்கக்
கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடை
பாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த
அவ் அகத்து மொட்டொடு மத்தமும்
பிறைக்கொள் சென்னி யன்றே
பிரியா(து) என்னுள் நின்றனவே. |
10 |
225
தூவி நீரொடு பூஅவை தொழு(து)
ஏத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி உள்நிறுத்தி அமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக்
கூத்தினைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள்
விடையான்அடி மேவுவரே. |
11 |
திருச்சிற்றம்பலம் |